தூதர் நூஹ் (நோவா) அவர்களின் வரலாறு.
இறைவன் ஒருவர் தவிர வேறில்லை.
தனித்தவர், ஞானமிக்கவர்.
இறைவனின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.,
தூதர் நூஹ்(நோவா) பற்றி வரக்கூடிய குர்'ஆன் வசனங்களை பல இடங்களிலிருந்து எடுத்து அதனை ஒன்று சேர்த்து அதன் மொழிபெயர்ப்பை இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். படிப்பினை பெறுவோம்.
இறைவன், நம்மை அவருடைய கருணை மற்றும் நேர்வழியில் நுழைவிப்பாராக.,
அவ்துபில்லாஹிமின சைத்தானிர் ரஜீம்
பிஸ்மில்லாஹிர் ரஹூமாநிர் ரஹீம்
[42:13] நோவாவுக்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் ஜீஸஸுக்கு விதித்ததுமாவது: இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள். அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் போலித் தெய்வ வழி பாடு செய்பவர்கள் பெரும் சீற்றம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார். முற்றிலும் சரணடைந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.
[42:14] முரண் நகையாக, அவர்களிடம் அறிவு வந்ததற்குப் பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் சீற்ற உணர்வின் காரணமாக, அவர்கள் பிரிவுகளாகச் சிதறிப் போனார்கள். வரையறுக்கப்பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில், வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலைமுறையினர் முற்றிலும் ஐயங்களுடனே இருக்கின்றனர்.
.
[42:15] இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் செய்துவர வேண்டுமென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக, மேலும் அவர்களுடைய ஆசைகளைப் பின்பற்றாதீர். மேலும் பிரகடனிப்பீராக: கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள்தான் எங்களுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு, மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனைவரையும் ஒன்றாகத் திரட்டுவார்; இறுதிவிதி அவரிடமே உள்ளது.
[26:105] நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்பமறுத்தனர்.
[21:76] மேலும், அதற்கு முன்னர், நோவா அழைத்தார், நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் பிரளயத்திலிருந்து நாம் காத்தோம்.
[71:1] நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: வலி நிறைந்ததொரு தண்டனை அவர்களை வருத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்.
[71:2] அவர் கூறினார், என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவனாக இருக்கின்றேன்.
[11:25] நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான் தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறியவராக அனுப்பினோம்.
[23:23] “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள். அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை. நீங்கள் நன்னெறியுடையோராக இருக்க மாட்டீர்களா?” என்று கூறியவராக, நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்.
[71:3] “நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.
[7:59] நாம் நோவாவை அவர் சமூகத்தாரிடம் அனுப்பினோம், அவர், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் உங்களுக்கு இல்லை, அச்சுறுத்துகின்றதொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்.
[11:26] “நீங்கள் கடவுள்-ஐ அன்றி வழிபட வேண்டாம், வலிமிகுந்ததொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.
[26:106] அவர்களுடைய சகோதரர் நோவா அவர்களிடம் கூறினார், “நீங்கள் நன்னெறியாளர்களாக ஆகமாட்டீர்களா?
[7:60] அவருடைய சமூகத்தாரில் இருந்த தலைவர்கள் கூறினர் மிக நெடிய வழிதவறுதலில் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.
[7:61] அவர் கூறினார், என் சமூகத்தாரே, நான் வழிதவறியவனாக இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.
[7:62] என் இரட்சகருடைய தூதுச் செய்திகளை நான் உங்களிடம் சேர்ப்பிக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு அறிவுறுத்துகின்றேன், மேலும் நீங்கள் அறியாதவற்றைக் கடவுள்-இடமிருந்து நான் அறிவேன்.
[7:63] நீங்கள் கருணையை அடையும் பொருட்டு உங்களை எச்சரிப்பதற்காகவும் நன்னெறியின் பால் உங்களை வழிநடத்துவதற்காகவும், உங்களைப் போன்ற ஒரு மனிதன் மூலம், உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு நினைவூட்டல் வருவதுதென்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றாக இருக்கின்றதா?”
[26:107] நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதர் ஆவேன்.
[26:108] நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[26:109] உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து வருகின்றது.
[26:110] நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.
[71:4] “அப்போது அவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். மிக நிச்சயமாக, கடவுள்-ன் நிர்ணையமனமானது, அதற்குரிய நேரம் வந்துவிட்டவுடன், ஒருபோதும் தாமதிக்கப்பட இயலாது நீங்கள் மட்டும் அறிந்திருந்தால்”.
[23:24] அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்பமறுத்த தலைவர்கள் கூறினர், “இவர் உங்களுக்கிடையில் முக்கியத்துவம் அடைய விரும்புகின்ற, உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. கடவுள் நாடியிருந்தால், அவர் வானவர்களைக் கீழே அனுப்பியிருக்க முடியும். நம்முடைய முன்னோர்களிடமிருந்து இது போன்ற எதையும் நாம் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை.
[23:25] “இவர் பித்துப் பிடித்து போன ஒரு மனிதர் அவ்வளவுதான். சிறிது காலத்திற்கு அவரைச் சற்று அலட்சியப்படுத்தி விடுங்கள்.”
[54:9] அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத்தார் நம்பமறுத்தனர். நம்முடைய ஊழியரை அவர்கள் நம்பமறுத்தனர் மேலும், கூறினர் கிறுக்கர்! அவர் துன்புறுத்தப்பட்டார்.
[11:27] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்ப மறுத்த தலைவர்கள், “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை என்றே நாங்கள் காண்கின்றோம், மேலும் உம்மை முதலில் பின்பற்றும் மக்கள் எங்களில் மிக மோசமானவர்களாக இருப்பதையே நாங்கள் காண்கின்றோம். எங்களுக்கு மேலாக எந்த மேன்மையும் நீர் பெற்றிருக்கவில்லை என்பதையே நாங்கள் காண்கின்றோம். உண்மையில், நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்”
[26:111] அவர்கள் கூறினார்கள், “எங்களுக்கிடையில் மிகவும் மோசமானவர்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உங்களுடன் நம்பிக்கை கொள்ள இயலும்?”
[26:112] அவர் கூறினார், “அவர்கள் என்ன செய்தார்கள் என நான் எப்படி அறிவேன்?
[26:113] அவர்களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது. உங்களால் உணர முடிந்தால்
[26:114] “நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும் வெளியேற்றிவிட மாட்டேன்.
[26:115] “நான் தெளிவு படுத்துகின்ற ஓர் எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை.”
[11:28] அவர் கூறினார், என் சமூகத்தாரே, என் இரட்சகரிட மிருந்து ஓர் உறுதியான சான்றை நான் பெற்றிருந்தால்? நீங்கள் அதனைக் காண முடியாத போதிலும், தனது கருணையிலிருந்து என்னை அவர் ஆசீர்வதித்திருந்தால்? இதன் மீது நம்பிக்கை கொள்ளுமாறு நாங்கள் உங்களை நிர்பந்திக்கவா போகின்றோம்?
[11:29] என் சமூகத்தாரே, உங்களிடம் நான் பணம் எதுவும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி கடவுள் வசமிருந்தே வருகின்றது. நம்பிக்கை கொண்டோரை நான் வெளியேற்றி விடமாட்டேன்; அவர்கள் தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பார்கள் (மேலும் அவர் மட்டுமே அவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்). அறியாத மக்களாகவே உங்களை நான் காண்கின்றேன்.
[11:30] என் சமூகத்தாரே, அவர்களை நான் வெளியேற்றி விட்டால், கடவுள்-க்கு எதிராக எனக்கு ஆதரவளிக்க யாரால் முடியும்? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?
[11:31] கடவுள்-ன் பொக்கிஷங்களை நான் சொந்தமாகக் கொண்டுள்ளேன் என்று நான் உரிமை கோர வில்லை, அன்றி எதிர்காலத்தையும் நான் அறிய மாட்டேன், அன்றி நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை, மேலும் உங்களுடைய கண்களுக்கு இழிவானவர்கள் மீது, பாக்கியங்கள் எதையும் கடவுள் அருளமாட்டார் என்றும் நான் கூறவில்லை. அவர்களுடைய உள்ளார்ந்த எண்ணங்களில் இருப்பது என்ன என்பதைக் கடவுள் நன்கறிவார். (இதனை நான் செய்தால்) நான் வரம்புமீறியவன் ஆகிவிடுவேன்.
[10:71] நோவாவின் வரலாற்றை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக. அவர் தன் சமூகத்தாரிடம் கூறினார், என் சமூகத்தாரே, எனது நிலையும் கடவுள்-ன் வெளிப்பாடுகளைப் பற்றிய எனது நினைவூட்டுதல்களும் உங்களுக்கு மிகவும் அதிகமானதாகக் தென்படுமானால், அப்போது நான் எனது பொறுப்பைக் கடவுள்-யிடம் ஒப்படைத்து விடுகின்றேன். நீங்கள் உங்கள் தலைவர்களுடன் ஒன்று கூடிக்கலந்து, உங்களுக்கிடையில் ஓர் இறுதித் தீர்மானத்திற்கு ஒத்துவாருங்கள், பின்னர் தாமதமின்றி அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
[10:72] நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி கடவுள்-யிடமிருந்து வருகின்றது. சரணடைந்த ஒருவனாக இருக்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
[11:32] அவர்கள் கூறினர், நோவாவே, நீர் எங்களுடன் வாதித்தீர், மேலும் தொடர்ந்து வாதித்துக் கொண்டே இருந்தீர். நீர் உண்மையாளராக இருந்தால், எங்களிடம் நீர் பயமுறுத்துகின்ற அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்.
[11:33] அவர் கூறினார், கடவுள் ஒருவர்தான் அதனை உங்களிடம் கொண்டு வருபவர், அவர் அவ்விதம் நாடினால், அப்போது நீங்கள் தப்பித்து விட முடியாது.
[11:34] நான் உங்களுக்கு உபதேசம் செய்தாலும், உங்களை வழிகேட்டில் அனுப்ப வேண்டும் என்பது கடவுள் நாட்டமாகயிருப்பின், என்னுடைய உபதேசம் உங்களுக்குப் பயனளிக்காது. அவரே உங்கள் இரட்சகர், மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
[11:35] அவர்கள் இந்தக் கதையை இவர் உருவாக்கிக் கொண்டார் என்று கூறுவார்களாயின், அப்போது கூறும், இதனை நான் உருவாக்கியிருப்பேனாயின், பின்னர் என் குற்றத்திற்கு நானே பொறுப்பாவேன், மேலும் நீங்கள் செய்யும் எந்தக் குற்றத்திற்கும், நான் குற்றமற்றவன்ஆவேன்.
[26:116] அவர்கள் கூறினர், நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், நோவாவே, நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்.
[54:10] அவர் தன் இரட்சகரை இறைஞ்சினார், நான் அடக்கு முறை செய்யப்பட்டவனாக இருக்கின்றேன்; எனக்கு வெற்றியை அளிப்பீராக.
[23:26] அவர் கூறினார்,என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக.
[26:117] அவர் கூறினார், என் இரட்சகரே, என் சமூகத்தார் என்னை நம்பமறுத்து விட்டனர்.
[71:5] அவர் கூறினார், என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட்டேன்.
[71:6] ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.
[71:7] உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களானார்கள்.
[71:8] பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.
[71:9] பின்னர் அவர்களுக்கு நான் உரக்கப் பிரகடனித்தேன். மேலும் அந்தரங்கமாகவும் நான் அவர்களிடம் பேசினேன்.
[71:10] நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.
[71:11] ‘பின்னர் அவர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.
[71:12] ‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத் தோட்டங்களையும்,ஊற்றுகளையும் உங்களுக்கு வழங்குவார்.
[71:13] நீங்கள் ஏன் கடவுள்-யிடம் பக்தியோடிருக்க முனையக்கூடாது?
[71:14] அவர்தான் உங்களைப் பல கட்டங்களில் படைத்தவர்.
[71:15] ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக்காகப் படைத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?
[71:16] அதிலே ஒரு வெளிச்சமாக இருப்பதற்காகச் சந்திரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக்காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.
[71:17] மேலும் பூமியிலிருந்து செடிகளைப் போல் கடவுள் உங்களை முளைவிடச் செய்தார்.
[71:18] பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.
[71:19] பூமியைக் கடவுள் உங்களுக்கு வசிக்கத்தக்கதாக ஆக்கினார்.
[71:20]அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக் கொள்ளும் வண்ணம்.
[71:21] நோவா கூறினார், என் இரட்சகரே, அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்ட போது, இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின் பற்றினர்.
[71:22] பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் தீட்டினர்
[71:23] அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வத், சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.’
[71:24] அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். எனவே, தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக.
[71:26] நோவா மேலும் கூறினார், என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்பமறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.
[71:27] ஏனெனில், நீர் அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய ஊழியர்களை வழிகெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோரான நம்பமறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.
[71:28] என் இரட்சகரே, என்னையும் என் பெற்றோரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொருவரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்பமறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்து விடாதீர்.”
[26:118] அவர்களுக்கெதிராக எனக்கு வெற்றியை வழங்குவீராக, மேலும் என்னையும் நம்பிக்கை கொண்ட என் குழுமத்தையும் காப்பீராக.
[23:26] அவர் கூறினார், என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விட்டதால், எனக்கு வெற்றியை வழங்குவீராக.
[37:75] இவ்விதமாக, நோவா நம்மை அழைத்தார், மேலும் நாமே சிறப்பாக மறுமொழியளிப்பவர்களாக இருந்தோம்.
[11:36] நோவாவுக்கு உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. அவர்களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.37. நமது கவனமிக்க பார்வையின் கீழ், நமது உள்ளுணர்வின்படி, படகைக்கட்டும், மேலும் வரம்பு மீறியோரின் சார்பாக என்னிடம் இறைஞ்சாதீர், அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென விதிக்கப் பட்டுள்ளனர்.
[11:37] நமது கவனமிக்க பார்வையின் கீழ், நமது உள்ளுணர்வின்படி, படகைக் கட்டும், மேலும் வரம்பு மீறியோரின் சார்பாக என்னிடம் இறைஞ்சாதீர், அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளனர்.
[23:27] பின்னர் நாம் அவருக்கு உள்ளுணர்வூட்டினோம்: நம்முடைய விழிப்பான கண்களின் கீழ், மேலும் நம் முடைய உள்ளுணர்வூட்டலின்படி படகைக்* கட்டுவீராக. நமது கட்டளை வரும்போது, மேலும் வளி மண்டலம் கொதிப்படையும் போது, (உம்முடைய வீட்டுப் பிராணிகளில்) ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியையும், அழிக்கப்படுவார்கள் எனக் கண்டனம் செய்யப்பட்டவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும் அதில் இட்டுக் கொள்வீராக. வரம்புமீறியவர்கள் சார்பாக என்னிடம் பேசாதீர்; அவர்கள் மூழ்கடிக்கப் படுவார்கள்.
*23:27 கதை சொல்பவர்கள் நோவாவின் சரித்திரத்தைக் கேலிக்குரியதாக ஆக்கி விட்டார்கள். நோவாவின் படகு, மரக் கட்டைகளால் செய்யப்பட்டு, சாதாரணமான கயிறுகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட தட்டையானதொரு மரக்கலமோயாகும். அவ்வெள்ளம் சாக்கடல் பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே ஏற்பட்டது, மேலும் அந்தப் பிராணிகள் நோவாவால் வளர்க்கப்பட்ட வீட்டுப் பிராணிகளே.
[23:28] உம்முடன் இருப்பவர்களோடு சேர்ந்து, படகின் மீது நீர் அமர்ந்துவிட்டவுடன், ‘பாவிகளான மக்களிட மிருந்து நம்மைக் காத்ததற்காக, கடவுள்-ஐப் புகழுங்கள்,’ என்று நீர் கூற வேண்டும்.
[23:29] மேலும் கூறுவீராக, ‘என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரையிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்.’
[11:38] அவர் படகைக் கட்டிக் கொண்டிருக்கும் போது, அவருடைய சமூகத்தார் அவரைக் கடந்து சென்ற போதெல்லாம் அவரைப் பார்த்து நகைத்தனர். அவர் கூறினார், எங்களைப் பார்த்து நீங்கள் நகைக்கலாம், ஆனால் நீங்கள் நகைப்பதைப் போலவே, நாங்களும் உங்களைப் பார்த்து நகைக்கின்றோம்.
[11:39] இழிவு மிக்கதோர் வேதனையை அனுபவிக்கவும், நிலைத்திருக்கும் ஒரு தண்டனைக்கு உள்ளாகவும் போவது யார் என்பதை நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்.
[11:40] நமது தீர்ப்பு வந்து, வளிமண்டலம் கொதித்த போது, நாம் கூறினோம், கண்டனத்திற்குள்ளானோரைத் தவிர, ஒவ்வொரு வகையிலும் ஒரு ஜோடியை* சுமந்து கொண்டு, உம்முடைய குடும்பத்தாருடன் செல்லும். நம்பிக்கை கொண்டோரை உம்முடன் சுமந்து செல்லும். மேலும் அவருடன் நம்பிக்கை கொண்டோர் மிகச் சிலர் மட்டுமே.
11:40 & 44 இது நிரூபிக்கப்பட்ட கடவுளின் சத்தியமாகும்: நோவாவின் படகு சாதாரணமான கயிறுகளால் ஒன்றினைத்துக் கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆனது பொதுவான கருத்துக்கு மாற்றமாக, அவ்வெள்ளம் இன்றைய சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகள் வரை மட்டுமே இருந்தது, மேலும் அந்தப் பிராணிகள் நோவாவின் கால் நடைகள் மட்டுமே, பூமியில் வாழ்ந்த எல்லாப் பிராணிகளும் அல்ல.
[11:41] அவர் கூறினார், வந்து படகில் ஏறிக் கொள்ளுங்கள். இது மிதந்து செல்வதும் நங்கூரமிடப்படுவதும் கடவுள் பெயராலேயே ஆகும். என் இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[54:11] பின்னர் நாம் தண்ணீரை ஊற்றியவண்ணம், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டோம்.
[54:12] மேலும் நாம் பூமியிலிருந்து ஊற்றுகளைப் பொங்கி வரச்செய்தோம். முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானத்தைச் செயல்படுத்த நீர்பரப்புகள் ஒன்று கலந்தன.
[54:13] கட்டைகளாலும் கயிறுகளாலும் செய்யப்பட்ட ஒரு படகில் அவரை நாம் சுமந்து கொண்டோம்.
[54:14] நம்முடைய விழிப்பான கண்களின் கீழ் அது ஓடியது; நிராகரிக்கப்பட்ட ஒருவருக்குரிய ஒரு வெகுமதி.
[11:42] மலைகளைப் போன்ற அலைகளின் மீது அவர்களுடன் அது மிதந்து சென்ற போது, பிரிந்திருந்த அவருடைய மகனை நோவா அழைத்தார்: என் மகனே, வந்து எங்களுடன் ஏறிக்கொள்; நம்பமறுப்போருடன் இருக்காதே.
[11:43] அவன் கூறினான், தண்ணீரில் இருந்து என்னைக் காத்துக் கொள்ள, ஒரு மலையின் மீது நான் புகலிடம் எடுத்துக் கொள்வேன். அவர் கூறினார், இன்றைய தினம் கடவுள்-ன் தீர்ப்பிலிருந்து எவரையும் எதுவும் காப்பாற்றி விடாது; அவருடைய கருணைக்குத் தகுதியானவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவர்). அலைகள் அவர்களைப் பிரித்தன, மேலும் மூழ்கியவர்களோடு அவன் இருந்தான்.
[11:44] பிரகடனம் செய்யப்பட்டது: பூமியே, உனது தண்ணீரை விழுங்கிவிடு, மேலும் வானமே, நிறுத்து. பின்னர் தண்ணீர் வற்றியது; தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. இறுதியில் படகு *ஜுதி குன்றுகளில் தங்கியது.* அப்போது இது பிரகடனம் செய்யப்பட்டது: வரம்புமீறியவர்கள் அழிந்து போனார்கள்.
[7:64] அவர்கள் அவரை ஏற்க மறுத்தனர், அதன்விளைவாக, அவரையும் மரக்கலத்தில் அவருடன் இருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம், அத்துடன் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்தவர்களை மூழ்கடித்தோம்; அவர்கள் குருடர்களாக இருந்தனர்.
[10:73] அவர்கள் அவரை ஏற்கமறுத்தனர், அதன் விளைவாக, நாம் அவரையும் மரக்கலத்தில் அவரோடு சேர்ந்து கொண்டவர்களையும் காப்பாற்றினோம்; நாம் அவர்களை வாரிசுகளாக்கினோம். மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்கமறுத்தவர்களை நாம் மூழ்கடித்தோம். விளைவுகளைக் கவனித்துப்பார்ப்பீராக; அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்தனர்.
[26:119] அவரையும் சுமை நிரம்பிய படகில் அவருடன் கூட இருந்தவர்களையும் நாம் கரை சேர்த்தோம்
[26:120] பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.
[37:76] அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மகத்தான பேரழிவிலிருந்து நாம் காப்பாற்றினோம்
[37:77] உயிருடன் தப்பியவர்களாக அவருடைய சகாக்களை நாம் ஆக்கினோம்.
[71:25] அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர், மேலும் நரகநெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-யிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவியாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.
[11:45] நோவா தன் இரட்சகரை இறைஞ்சினார்: என் இரட்சகரே, என் மகன் என் குடும்பத்தின் ஓர் அங்கத்தினன் ஆவான், மேலும் உமது வாக்குறுதி சத்தியமானது. ஞானம் உடையோரில் நீரே மிகுந்த ஞானம் உடையவர்.
[11:46] அவர் கூறினார், நோவாவே, அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நீர் அறியாத எதை யேனும் என்னிடம் கேட்பது நன்னெறியல்ல* நீர் அறியாதவர்களைப் போல் ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நான் உமக்கு அறிவுறுத்துகிறேன்.
*11:46 சிபாரிசு என்பது மனிதர்களை போலித்தெய்வ வழிபாட்டின் பால் மயக்கி இழுத்துச்செல்வதற்கு சாத்தானின் திறன் மிக்கதொரு தூண்டில் இரையாகும். இருப்பினும், ஆப்ரஹாம் தன் தந்தைக்கு உதவி செய்ய முடியவில்லை, அன்றியும் நோவா தன்னுடைய மகனுக்கும் முஹம்மத் தன் சொந்த உறவினர்களுக்கும் உதவி செய்ய முடியவில்லை
[11:47] அவர் கூறினார், என் இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சா மலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என்மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந்தோருடனே இருப்பேன்.
[11:48] பிரகடனம் செய்யப்பட்டது: நோவாவே, உம்மீதும் உம்முடனிருக்கும் தோழர்களின் சந்ததியிலிருந்து தோன்றும் தேசங்களின் மீதும் சாந்தியுடனும் ஆசிகளுடனும் நீர் கரையிறங்குவீராக. உங்கள் சந்ததியில் தோன்றும் மற்ற தேசங்களைப் பொறுத்த வரை, நாம் அவர்களைச் சிறிது காலம் ஆசீர்வதிப்போம், பின்னர் அவர்களை வலி மிகுந்த தண்டனைக்கு உள்ளாக்குவோம்.
[29:14] நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்திருந்தார். அதன் பின்னர், அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.
[11:49] இது, கடந்த காலத்தில் இருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தி ஆகும். அவற்றைப் பற்றி நீர் எவ்வித அறிவும் பெற்றிருக்கவில்லை. - நீரோ அல்லது உம் சமூகத்தாரோ - இதற்கு முன்னர். எனவே, பொறுமையுடன் இருப்பீராக. இறுதி வெற்றி நல்லோருக்கே உரியது.
[26:121] இது ஒரு படிப்பினையாகத் திகழவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.
[29:15] அவரையும் மரக்கலத்தில் அவருடன் கூட இருந்த வர்களையும் நாம் காப்பாற்றினோம், மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
[37:78] மேலும் பின்வரும் தலைமுறையினருக்காக அவருடைய சரித்திரத்தை நாம் பாதுகாத்தோம்.
[37:79] மக்களில் நோவாவின் மீது சாந்தி நிலவுவதாக.
[37:80] இவ்விதமாகவே நாம் நன்னெறியாளர்களுக்கு வெகுமதியளிக்கின்றோம்.
[37:81] நம்பிக்கை கொண்ட நம்முடைய ஊழியர்களில் அவர் ஒருவர் ஆவார்.
[37:82] மற்றவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
[54:15] அதனை ஒரு படிப்பினையாக நாம் அமைத்தோம்.உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[54:16] எச்சரிக்கைகளுக்குப் பின்னர் என்னுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!
[54:17] கற்றுக் கொள்ள எளிதானதாக இந்தக் குர்ஆனை நாம் ஆக்கியுள்ளோம். உங்களில் எவரேனும் கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா?
[23:30] இவை உங்களுக்குப் போதிய சான்றுகளை வழங்க வேண்டும். நிச்சயமாக நாம் உங்களைச் சோதனையில் ஆழ்த்துவோம்.
[26:122] மிக நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்